யோவா 6:25-35

யோவா 6:25-35 IRVTAM

கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார். அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.