யோவா 6:1-21

யோவா 6:1-21 IRVTAM

இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள். இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார். அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார். தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான். அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து: இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான். இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார். அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய், படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள். அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.