யோவா 3:1-18

யோவா 3:1-18 IRVTAM

யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்; காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா? உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை. பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.