யோவா 16:5-15

யோவா 16:5-15 IRVTAM

இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன்.