யோவா 13:21-32

யோவா 13:21-32 IRVTAM

இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார். அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.