யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன். யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். நான் முதலில் என் பெயர் விளங்கச்செய்ய சீலோவிலுள்ள என் இடத்திற்கு நீங்கள் போய், இஸ்ரவேல் மக்களுடைய பொல்லாப்புக்காக நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள். நீங்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்திரவுகொடாமலும் போனதினால், என் பெயர் சூட்டப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த இடத்திற்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன். நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.