எரே 51
51
அத்தியாயம் 51
1யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பச்செய்து, 2தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளில் அதற்கு விரோதமாகசூழ்ந்து கொண்டிருப்பார்கள். 3வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்செய்யுங்கள். 4குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள். 5அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை. 6நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது யெகோவா அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார். 7பாபிலோன் யெகோவாவுடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கச்செய்தது; அதின் மதுவை மக்கள் குடித்தார்கள்; ஆகையால் மக்கள் புத்திமயங்கிப்போனார்கள். 8பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும். 9பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானம்வரை ஏறி ஆகாய மண்டலங்கள் வரை எட்டினது. 10யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள். 11அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்#51:11 எடுத்துக் கொள்ளுங்கள்; யெகோவா மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது யெகோவா வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி. 12பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதுங்கியிருப்பவர்களை வையுங்கள்; ஆனாலும் யெகோவா எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார். 13திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது. 14மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனிதரால் உன்னை நிரம்பச்செய்வேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்செய்வார்கள் என்று சேனைகளின் யெகோவா தம்முடைய ஜீவனைக்கொண்டு வாக்குக்கொடுத்தார். 15அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். 16அவர் சத்தமிடும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். 17மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை. 18அவைகள் மாயையும் மகா வஞ்சகமான செயலாக இருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும். 19யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்திரமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். 20நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன். 21உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன். 22உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன். 23உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன். 24பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் எல்லா குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 25இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 26மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக் கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற இடமாவாய் என்று யெகோவா சொல்லுகிறார். 27தேசத்தில் கொடியேற்றுங்கள்; மக்களுக்குள் எக்காளம் ஊதுங்கள்; மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரவழையுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; அரிப்புள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரச்செய்யுங்கள். 28மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள். 29அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் யெகோவா நினைத்தவைகள் நிலைக்கும். 30பாபிலோன் பராக்கிரமசாலிகள் போர்செய்யாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து தைரியமற்றவர்களானார்கள்; அதின் இருப்பிடங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது. 31கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க, 32தபால்காரன்மேல் தபால்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான். 33பாபிலோன் மகள் மிதிக்கப்படுங் களத்திற்குச் சமானம்; அதைப் போரடிக்கும் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்தில் அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 34பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான். 35எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள். 36ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வற்றிப்போகவும் அதின் ஊற்றைச் சுரக்கவும்செய்வேன். 37அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தங்குமிடமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாகப்போகும். 38ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள். 39அவர்கள் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 40அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகச்செய்வேன். 41சேசாக்கு பிடிபட்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? தேசங்களுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி? 42சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் திரளான அலைகளினால் அது மூடப்பட்டது. 43அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்திரமுமான பூமியுமாய், ஒரு மனிதனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாகப்போனது. 44நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கவைப்பேன்; மக்கள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும். 45என் மக்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவுடைய கோபத்தின் உக்கிரத்திற்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ளக்கடவன். 46உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருடத்தில் ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருடத்தில் வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்தில் கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான். 47ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள். 48வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 49பாபிலோன் இஸ்ரவேலில் கொலைசெய்யப்பட்டவர்களை விழச்செய்ததுபோல, பாபிலோனிலும் அனைத்து தேசங்களிலும் கொலைசெய்யப்படுகிறவர்கள் விழுவார்கள். 50பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. 51நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; யெகோவாவுடைய ஆலயத்தின் பரிசுத்த இடங்களின்மேல் அந்நியர் வந்ததினால் வெட்கம் நம்முடைய முகங்களை மூடியது. 52ஆகையால், யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலைசெய்யப்படுகிறவர்கள் கத்துவார்கள். 53பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 54பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும். 55யெகோவா பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியச்செய்வார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் ஆரவாரமாயிருக்கும். 56பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவா நிச்சயமாகப் பதில் அளிப்பார். 57அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார். 58பாபிலோனின் அகலமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான இடங்கள் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே மக்கள் பிரயாசப்பட்டது வீணும், மக்கள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது நெருப்புக்கு இரையுமாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 59பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினான். 60யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாட்சிசெய்யும் நான்காம் வருடத்தில் பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனுடன்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை. 61எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: 62யெகோவாவே, இந்த இடத்தில் மனிதனும் மிருகங்களும் தங்காமலிருக்க, அது என்றென்றைக்கும் அழிந்த நிலையிலிருக்க, அதை அழித்துப்போடுவேன் என்று தேவனே நீர் அதைக்குறித்து சொன்னீர் என்பதை நீ சொல்லி, 63நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தபோது, அதில் ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு, 64இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரச்செய்யும் தீங்கினால் எழுந்திருக்கமுடியாமல் சோர்ந்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான்.
எரேமியாவின் வசனங்கள் இத்துடன் முடிந்தது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எரே 51: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.