எரே 36:27-32

எரே 36:27-32 IRVTAM

ராஜா அந்தச் சுருளையும், அதில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார். மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா கண்டிப்பாக வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அழிப்பான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு வம்சத்தில் ஒருவனும் இருக்கமாட்டான்; அவனுடைய சடலங்களோவென்றால், பகலின் வெப்பத்திற்கும் இரவின் குளிருக்கும் எறியப்பட்டுக்கிடக்கும். நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிமக்கள்மேலும், யூதா மனிதர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்குகளையெல்லாம் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் மகனாகிய பாருக்கு என்னும் காரியதரிசியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் நெருப்பால் சுட்டெரித்த புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதில் எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளைப்போல அநேகம் வார்த்தைகளும் அவைகளுடன் சேர்க்கப்பட்டது.