நியா 7:8-15

நியா 7:8-15 IRVTAM

அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த 300 பேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது. அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன். போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள். மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது. கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான். அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், யெகோவா மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி