எபி 7:20-28

எபி 7:20-28 IRVTAM

அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார். அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள். ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார். பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார். நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது.