ஆதி 44:16-34

ஆதி 44:16-34 IRVTAM

அதற்கு யூதா: “என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? எதைப் பேசுவோம்? எதினாலே எங்களுடைய நீதியை விளங்கச்செய்வோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கச்செய்தார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள்” என்றான். அதற்கு அவன்: “அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள்” என்றான். அப்பொழுது யூதா அவனருகில் வந்து: “ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் வராதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம். எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார். அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனுடைய முகத்தைக் காணமுடியாது என்றோம். அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால், அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்திரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன். இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.