ஆதி 42:25-38

ஆதி 42:25-38 IRVTAM

பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்களுடைய பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், பயணத்திற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த இடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள். தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு, தன் சகோதரர்களைப் பார்த்து, “என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “தேவன் நமக்கு இப்படிச் செய்தது” என்ன என்றார்கள். அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: “தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான். நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல. நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம். அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரர்களில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான். அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, “அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும்” என்று சொன்னான். அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான்.