ஆதி 32:24-32

ஆதி 32:24-32 IRVTAM

யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி, அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: “என்னைப் போகவிடு, பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான். அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான். அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார். அப்பொழுது யாக்கோபு: “உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: “நீ என் நாமத்தைக் கேட்பதென்ன” என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான். அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான். அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.

ஆதி 32:24-32 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்