ஆதி 25:19-34

ஆதி 25:19-34 IRVTAM

ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான். ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது 40 வயதாயிருந்தான்; இவள் பதான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்தான்; யெகோவா அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்; அவனுடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். அவளது கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: “இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ” என்று சொல்லி, யெகோவாவிடத்தில் விசாரிக்கப் போனாள். அதற்குக் யெகோவா: “இரண்டு இனத்தார்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார். பிரசவநேரம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோமத்தாலான அங்கியைப் போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான். இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான். ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள். ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன்” என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது. அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான். அதற்கு ஏசா: “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு” என்றான். அப்பொழுது யாக்கோபு: “இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயிற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.