ஆதி 2:4-15

ஆதி 2:4-15 IRVTAM

தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை. அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான். தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு. அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் உண்டு. ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர். தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

ஆதி 2:4-15 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்