அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து: “ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம்” என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதர்களாகிய வாலிபர்கள்முதல் முதியவர்கள்வரையுள்ள மக்கள் அனைவரும் நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: “இந்த இரவில் உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ள அவர்களை எங்களிடம் வெளியே கொண்டுவா” என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடம் போய்: “சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம். இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம்” என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள். அப்பொழுது அந்த மனிதர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் பக்கம் வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோர்களும் பெரியோர்களுமாகிய மனிதர்களுக்குப் பார்வையற்றுப்போகச் செய்தார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். பின்பு அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: “இந்த இடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? உன்னுடைய மகன்களாவது, மகள்களாவது, மருமகன்களாவது பட்டணத்தில் உனக்குரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களை இந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் யெகோவாவுடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் யெகோவா எங்களை அனுப்பினார்” என்றார்கள். அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் மகள்களைத் திருமணம் செய்யப்போகிற தன் மருமகன்களோடு பேசி: “நீங்கள் எழுந்து இந்த இடத்தைவிட்டுப் புறப்படுங்கள்; யெகோவா இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான்; அவனுடைய மருமகன்களின் பார்வைக்கு அவன் கேலிசெய்வதைப் போலிருந்தது.