ஆதி 13:5-18

ஆதி 13:5-18 IRVTAM

ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள். லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார். அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.