ஆதி 1:19-31

ஆதி 1:19-31 IRVTAM

சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.