எசேக் 37:1-14

எசேக் 37:1-14 IRVTAM

யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது. அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன். என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.