யாத் 4:1-17

யாத் 4:1-17 IRVTAM

அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார். அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார். அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும். நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன். அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்றார்.