யாத் 34:1-9

யாத் 34:1-9 IRVTAM

யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில். உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு: “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்