யாத் 3:13-21

யாத் 3:13-21 IRVTAM

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல். அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள். ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன். ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான். அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை.