யாத் 3:1-12

யாத் 3:1-12 IRVTAM

மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான். அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

யாத் 3:1-12 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்