யாத் 15:1-18

யாத் 15:1-18 IRVTAM

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம். பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். யெகோவாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர். மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும். ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள். பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள். நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.