யாத் 12:21-30

யாத் 12:21-30 IRVTAM

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.

யாத் 12:21-30 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்