அதற்குப்பின்பு, இரவுநேரத் தரிசனங்களில் நான்காம் மிருகத்தைக் கண்டேன்; அது கொடியதும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன; அது நொறுக்கி அழித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்பிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது. அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சிறிய கொம்பு எழும்பியது; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனித கண்களைப்போன்ற கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிங்காசனங்கள் வைக்கப்பட்டன; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய உடை உறைந்த மழையைப்போலவும், அவருடைய தலைமுடி வெண்மையாகவும், பஞ்சைப்போல தூய்மையாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் நெருப்புத் தழலும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடானகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புத்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினால் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற நெருப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் நேரமும் நிறைவேறும்வரை அவைகள் உயிரோடு இருக்கக் கட்டளையிடப்பட்டது. இரவுநேரத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மனிதனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுள் உள்ளவரின் அருகில் கொண்டுவரப்பட்டார். சகல மக்களும் தேசத்தார்களும், பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும், மகிமையும், அரசாட்சியும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ஆளுகை அழியாததுமாயிருக்கும்.
வாசிக்கவும் தானி 7
கேளுங்கள் தானி 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: தானி 7:7-14
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்