தானி 6:19-27

தானி 6:19-27 IRVTAM

காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான். ராஜா குகையின் அருகில் வந்தபோது, துயரசத்தமாகத் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. தானியேலின்மேல் குற்றம்சுமத்தின மனிதர்களையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்களுடைய மகன்களையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலே சேருவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது. பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக. என் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்செய்யப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்ஜியம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுவரைக்கும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.