அப் 23:11-35

அப் 23:11-35 IRVTAM

அன்று இரவிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, தைரியமாக இரு; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதர்களில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். இப்படிச் சபதம்பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாக இருந்தார்கள். அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும்போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் செய்துகொண்டோம். ஆகவே, நீங்கள் ஆலோசனைச் சங்கத்தினரோடு கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல ரோம அதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடம் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாக இருப்போம் என்றார்கள். இந்த சதித்திட்டத்தை பவுலினுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளேபோய், பவுலுக்குத் தெரிவித்தான். அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான். அப்படியே அவன் இவனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு செய்தியைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். அப்பொழுது ரோம அதிபதி அவனுடைய கையைப்பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் சொல்லவேண்டிய செய்தி என்ன? என்று கேட்டான். அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை மிகச் சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தினரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள். நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யும்வரைக்கும் தாங்கள் உண்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்செய்துகொண்டு, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றான். அப்பொழுது ரோம அதிபதி: நீ இவைகளை எனக்குத் தெரிவித்ததாக ஒருவருக்கும் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான். பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரர்களையும், இரவில் மூன்று மணியளவிலே, ஆயத்தம் செய்யுங்கள் என்றும்; பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாகக் கொண்டுபோகும்படிக்கு குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி, ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது: கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி தெரிவிப்பது என்னவென்றால்: இந்த மனிதனை யூதர்கள் பிடித்துக் கொலைசெய்யப்போகிற நேரத்தில், நான் போர்வீரர்களோடு கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன். அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குமுன் கொண்டுபோனேன். இவன் அவர்களுடைய வேதத்திற்கு அடுத்த காரியங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று அறிந்ததேயல்லாமல், மரணத்திற்காவது கைதுசெய்வதற்காவது ஏற்ற குற்றம் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன். யூதர்கள் இவனுக்கு விரோதமாக சதியோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாகச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாக இருப்பீராக என்றெழுதினான். போர்வீரர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப்போய், அடுத்தநாளில் குதிரைவீரர்களை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வரும்போது உன் காரியத்தைத் திட்டமாகக் கேட்பேன் என்று சொல்லி, ஏரோதின் அரண்மனையிலே அவனைக் காவல்பண்ணும்படி ஆணையிட்டான்.