பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.