அப் 17:1-15

அப் 17:1-15 IRVTAM

அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்; அங்கே யூதர்களுக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி, கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் வேதவாக்கியங்களிலிருந்து காண்பித்தான். அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள். விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள். அவர்கள் அங்கு இல்லாததால், யாசோனையும் சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு, இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள். பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள். உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள். பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான்.