அப் 15:1-13

அப் 15:1-13 IRVTAM

சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள். அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்; விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார். இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான். அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள். அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.