2 இராஜா 18:1-12

2 இராஜா 18:1-12 IRVTAM

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருட ஆட்சியில் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான். மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது. அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.