2 கொரி 7:5-16

2 கொரி 7:5-16 IRVTAM

எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார். அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன். ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள். எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன். இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே. மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது. எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.

2 கொரி 7:5-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்