2 கொரி 12:1-10

2 கொரி 12:1-10 IRVTAM

மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன். சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன். அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.