2 கொரி 11:16-33

2 கொரி 11:16-33 IRVTAM

பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன். நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன். அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ? நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்; அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரி 11:16-33 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்