2 நாளா 7:6-22

2 நாளா 7:6-22 IRVTAM

ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட யெகோவாவின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், யெகோவாவுடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான். அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிவரை வந்து, அவனோடுகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாட்கள்வரையும் பண்டிகையை ஆசரித்து, எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள். ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; யெகோவா தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள். இந்தவிதமாக சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; யெகோவாவுடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது. யெகோவா இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் சூட்டப்பட்ட என் மக்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்களுடைய பாவத்தை மன்னித்து, அவர்களுடைய தேசத்திற்கு செழிப்பைக் கொடுப்பேன். இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும். என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன். நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால், நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாசச் சொல்லாகவும் வைப்பேன். அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். அதற்கு அவர்கள்: தங்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவைவிட்டு, வேறே தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை வணங்கி, சேவித்ததால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.