2 நாளா 34:1-8

2 நாளா 34:1-8 IRVTAM

யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவுடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான். அவன் தன் அரசாட்சியின் எட்டாம் வருட ஆட்சியில், தான் இன்னும் இளவயதாயிருக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருடத்தில் மேடைகள், தோப்புகள், உருவங்கள், சிலைகள் ஆகிய இவைகள் இல்லாமல்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தத் தொடங்கினான். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு சிலைகளையும் வெட்டப்பட்ட சிலைகளையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்கு பலியிட்டவர்களுடைய கல்லறைகளின்மேல் தூவி, பூசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்களின்மேல் சுட்டெரித்து, இந்தவிதமாக யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினான். அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிவரையும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான். அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் இடித்து, சிலைகளை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான். அவன் தேசத்தையும் ஆலயத்தையும் தூய்மைப்படுத்தியபின்பு, அவன் தன் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு அனுப்பினான்.