2 நாளா 24
24
அத்தியாயம் 24
யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்
1யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள். 2ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். 3அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான். 4அதற்குப்பின்பு யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பம்கொண்டான். 5அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள். 6அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, யெகோவாவின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன? 7அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான். 8அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் யெகோவாவுடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து, 9யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள். 10அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள். 11அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள். 12அதை ராஜாவும் யோய்தாவும் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். 13அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். 14அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு யெகோவாவுடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் யெகோவாவுடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள். 15யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான். 16அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.
யோவாசின் துன்மார்க்கம்
17யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான் 18அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. 19அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய யெகோவா அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள். 20அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். 21அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 22அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: யெகோவா அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான். 23அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள். 24சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள். 25அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. 26அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபியப் பெண்ணான சிமிரீத்தின் மகனாகிய யோசபாத்துமே. 27அவன் மகன்களைக்குறித்தும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைக்குறித்தும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைக்குறித்தும், ராஜாக்களின் புத்தகமான சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 நாளா 24: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.