1 தெச 2:1-9

1 தெச 2:1-9 IRVTAM

சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம். எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை. தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.