1 சாமு 20:35-42

1 சாமு 20:35-42 IRVTAM

மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்: சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான். யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான். நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான். அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் கிபியா பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான். சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.