பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான். அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள். சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான். சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து, அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான்.
சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.