தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும், நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால், உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக.