1 இராஜா 19:1-8

1 இராஜா 19:1-8 IRVTAM

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான். அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான். யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான். அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.