1 இராஜா 18:20-40

1 இராஜா 18:20-40 IRVTAM

அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது எலியா மக்களை நோக்கி: யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் மீதியாக இருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ 450 பேர். அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். நீங்கள் உங்களுடைய தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியால் பதில் சொல்லும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு மக்களெல்லோரும் இது நல்ல வார்த்தை என்றார்கள். அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்செய்து: பாகாலே, எங்களுக்கு பதில் சொல்லும் என்று காலைதுவங்கி மத்தியானம்வரை பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் வரவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான். அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியானவேளை சென்றபின்பு, மாலைபலி செலுத்தும் நேரம்வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை, கவனிப்பவர்களும் இல்லை. அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து: உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, யெகோவாவுடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள். அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும். யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள். அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 இராஜா 18:20-40