அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்தில் மழை பெய்யாததால், சில நாட்களுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போனது.
அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்: நீ எழுந்து, சீதோனைச்சேர்ந்த சாரிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். அப்படியே அவன் எழுந்து, சாரிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் வாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம். யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள். அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, நான் தங்கியிருக்க இடம்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகச்செய்ததால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு; அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று யெகோவா வை நோக்கி விண்ணப்பம் செய்தான். யெகோவா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான். அப்பொழுது அந்தப் பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவுடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.