1 இராஜா 11:26-40

1 இராஜா 11:26-40 IRVTAM

சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனிதனாகிய நேபாத்தின் மகன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் அதிகாரியும் ராஜாவிற்கு எதிரியாக எழும்பினான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் ராஜாவிற்கு எதிரியாக எழும்பிய காரணம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது, யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான். அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதிய சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியில் தனியாக இருக்கும்போது, அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்திற்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். அவர்கள் என்னைவிட்டு, சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியர்களின் தேவனாகிய காமோசையும், அம்மோன் மக்களின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவனுடைய தகப்பனாகிய தாவீதைப்போல என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவும், என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என்னுடைய வழிகளில் நடக்காமல்போனதால் அப்படிச் செய்வேன். ஆனாலும் அரசாட்சி முழுவதையும் நான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என்னுடைய கற்பனைகளையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என்னுடைய ஊழியனாகிய தாவீதிற்காக, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனாலும் ராஜ்ஜியபாரத்தை அவனுடைய மகனுடைய கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். என்னுடைய நாமம் வெளிப்படும்படி, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே எனக்கு முன்பாக என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என்னுடைய வழிகளில் நடந்து, என்னுடைய ஊழியனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலர்களை உனக்குத் தருவேன். இப்படி நான் இந்தக் காரியத்திற்காக தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; இருந்தாலும் எல்லா நாளும் அப்படி இருக்காது என்று சொன்னான். அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 இராஜா 11:26-40