1 கொரி 12:1-11

1 கொரி 12:1-11 IRVTAM

அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

1 கொரி 12:1-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்