1 கொரி 10:19-33

1 கொரி 10:19-33 IRVTAM

இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா? எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும். கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன? மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்? ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல; நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.