தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. அந்தப்படி:
“ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து,
புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.