1 நாளா 16:4-18

1 நாளா 16:4-18 IRVTAM

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. யெகோவாவை துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.